Wednesday 22 January 2014

பொங்கு சனீஸ்வரர் திருக்கோவில்

பொங்கு சனீஸ்வரர்

      காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று கொள்ளிக் காடு.      இறைவன் அக்னி ரூபத்தில் காட்சி கொடுத்தால் கொள்ளிக்காடு என்ற பெயர் ஏற்பட்டது.  இந்நாளில் கள்ளிக்காடு என்ற பெயரால் அழைக்கிறார்கள்.      கொள்ளிக்காட்டில் பஞ்சின் மெல்லடியம்மை (மிருதுபாத நாயகி) உடனான அக்னீஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார்.      கோயிலில், குபேர மூலையில் தனிச் சன்னிதியில் எழுந்தருளி அருள் வழங்கும் சனீஸ்வரர் மிகவும் விசேஷமானவர்.  பொங்கு சனீஸ்வரர் என்பது அவருடைய பெயர்.      அக்னீஸ்வரர் கோயில் மேற்கு நோக்கி இருக்கிறது.  மூலவர் பெயர் அக்னீஸ்வரர் எனும் கொள்ளிக்காடர்.  அம்மை மிருதுபாத நாயகி என்னும் பஞ்சின் மெல்லடியார்.      தலமரம் வன்னி.  கோயிலுக்கு எதிரில் உள்ளது.  திருஞானசம்பந்தர் இத்தலத்து ஈசன் பெருமைகளை சொல்லும் போது, கூடினார்க்கு அருள்செய்வார் கொள்ளிக்காடரே என்று குறிப்பிடுகிறார்.      இத்தலத்து இறைவன் தன்னை வந்து வழிபடும் பக்தர்களுக்கு அருள்செய்து நலன்களை வழங்கக் கூடியவர் என்பதை திருஞான சம்பந்தர் தேவாரம் தெளிவாக காட்டுகிறது.      சனி பகவான் தயவுதாட்சண்யம் பாராதவர்.  வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர்.  அவரவர் செய்யும் தீவினைக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர் என்றாலும் கூட, ஒருவரது ஜனனகாலத்தில் சனி பகவான் நன்மை செய்யும் நிலையில் அமைந்திருந்தால் அவர்களுக்கு அளவற்ற நன்மைகளையும், சிறந்த முன்னேற்றத்தையும், கணக்கில்லாத பாக்கியங்களையும் வழங்கக்கூடியவர்.      தேவர்கள் முதல் மனிதர்கள் வரை அனைவரும் அவர் செய்யும் நன்மைகளை கருதாமல், அவரால் ஏற்படும் தீமைகளை மட்டுமே பார்த்து அஞ்சினர்.      தன்னைப்பற்றிய அபிப்பிராயத்தால் மனவருத்தம் கொண்ட சனிபகவான், வசிஷ்ட முனிவரிடம் சென்று இந்த வருத்தத்திலிருந்து நீங்க வழி கேட்டார்.      அவர் கூறியபடி அக்னிவனம் என்னும் கொள்ளிக்காட்டுக்கு வந்து கடும் தவம் கொண்டார்.      இறைவன் அவர் தவத்துக்கு இரங்கி, அக்னி சொரூபராக காட்சி கொடுத்தார்.  சனி பகவானை பொங்கு சனியாக மறு அவதாரம் எடுக்கச் செய்தார்.  மேலும் இந்தத் தலத்துக்கு வந்து தம்மையும், சனீஸ்வரரையும் வழிபடுபவர்களுக்கு சனிக்கிரகம் தொடர்பான எல்லாவகையான கெடுதல்களும் நீங்கும் என்று வரம் கொடுத்தார்.  சனிபகவானும் பொங்கு சனியாக அவதாரம் எடுத்து அந்தக் கோயில் குபேர மூலையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.      அக்னீஸ்வார் கோயிலுக்கு வந்து அக்னீஸ்வரரை வணங்கிய பின், தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறர் பொங்கு சனீஸ்வரர்.  தன்னை வழிபடுவோர்க்கு எல்லையில்லாத செல்வத்தை தருகிறார்.  எல்லாவிதமான மனக்கவலைகளையும் நீக்குகிறார்.  மகிழ்ச்சியான வாழ்வை அருள்கிறார்.      நிஷாத நாட்டை ஆண்ட அரசர்களுள் ஒருவன் நளன்.  இவனுக்கு திருமணமாகி, குழந்தைகள் பிறந்தபின் ஏழரைச் சனியினால் பிடிக்கப்பட்டான்.  அந்தக் காலக்கட்டத்தில் தன் அரசுடைமைகளை இழந்தான்.  தேரோட்டியாக, சமையல்காரனாக எல்லாம் வாழ்க்கையை ஓட்டினான்.  ஏழரை ஆண்டுகள் கழிந்தன.  அதன்பின், அவன் பொங்கு சனீஸ்வரரை பூஜித்தான்.  இழந்த எல்லாவற்றையும் பெற்றான் என்பது தல புராணத்தில் கண்ட தகவல்.      சோழ அரசன் ஒருவனுக்கு பிடித்த சனி விலகிய தலம் இது என்றும் சொல்கிறார்கள்.      கொள்ளிக்காடு தேவாரத்தில் இறைவன் யானையின் தோலை உரித்து போர்த்திக் கொண்ட செயல் கூறப்படுகிறது.      பஞ்சு தோய் மெல்லடிப் பாவையாளோடும்.      மஞ்சு தோய் கயிலையுள் மகிழ்வர் நாடொறும்.      வெஞ்சின் மருப்போடு விரைய வந்தடை.      குஞ்சரம் ஊத்தனர் கொள்ளிக் காடரே! என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.      இப்படி யானையை உரித்த வீரச்செயல் குறிப்பிடப்படுவதால், மக்கள் ஒரு காலத்தில் இந்தக் கோயிலை கரிஉரித்த நாயனார் கோயில் என்று அழைத்து வந்ததாக தெரிகிறது.      ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு மேலான பழைய கோயில்.  முதல் ராஜராஜ சோழன் காலத்தில் கல்லால் கட்டப்பட்ட சிவாலயம் இது.  பின்னர் முதல் குலோத்துங்க சோழன் காலங்களில் புதுப்பிக்கப்பட்டது.      அக்னி பகவான் தமது சாபம் தீர, இத்தலத்து இறைவனை பூஜித்ததாக ஒரு புராண வரலாறு உண்டு.  இதனால் இக்கோயில் அக்னீஸ்வரர் எனப்படுகிறது.      அக்னீஸ்வரர் கோயிலுக்கு முக்கியமான தலவிருட்சம் வன்னி மரம்.  வன்னி மரம் குபேர சம்பத்தை கொடுக்கக்கூடியது.  இன்னும் இரண்டு தல மரங்கள் ஊமத்தை மற்றும் கொன்றையாகும்.  ஊமத்தை தீராத சஞ்சலம், சித்த பிரம்மை, மனக்கவலை ஆகியவற்றை போக்கக்கூடியது.  இந்த மூன்று மரங்களையும் வழிபட, நலன்கள் அனைத்தும் விளையும் என்பதில் ஐயமில்லை.      நவக்கிரகங்கள் பொதுவாக வக்ர கதியில், அதாவது ஒன்றையொன்று பாராமல் தரிசனம் தருவார்கள்.  இந்தக் கோயிலில் நவக்கிரகங்கள், 'ப' வடிவில் இருக்கின்றன.  நாம் செய்த பாவங்கள் எல்லாவற்றையும் இத்தலத்து இறைவனான அக்னீஸ்வரர் அழித்து விடுவதால், நவக்கிரகங்கள் தமது வக்ர குணத்தை விட்டு ஒன்றினை ஒன்று நோக்கியபடி இங்கே கோயிலில் குடிகொண்டிருக்கிறார்கள்.      ஒருவரது ஜென்ம ராசியிலும், அதற்கு முன்னும் பின்னும் உள்ள ராசியிலுமாக மூன்று ராசிகளில் சனி வீற்றிருக்கும் காலம் ஏழரை சனி எனப்படும்.      ஏழரைச் சனியினால் பாதிக்கப்படுபவர்களும், அர்த்தாஷ்டம சனி மற்றும் அஷ்டம சனியினால் பாதிக்கப்பட்டவர்களும் கொள்ளிக்காட்டுக்க வந்து சிவபெருமானையும், பொங்கு சனியையும் வழிபட்டு பரிகாரங்கள் செய்ய, எல்லா துன்பங்களும் அகலும்.      சனி பகவானுக்கு என விசேஷ அபிஷேகமும், பொதுவான அபிஷேகங்களும் செய்விக்க வேண்டும்.  கறுப்பு அல்லது நீலநிற வஸ்திரம் அணிவிக்க வேண்டும்.      நீல மரங்கள், குறிப்பாக ஊமத்தை மலர் சனிபகவானுக்கு விருப்பத்தைத் தரக்கூடியதாகும்.  ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது நல்லது.  நீலக்கல் மோதிரத்தை பொங்கு சனீஸ்வரர் முன்வதை:து பூஜித்து அணிவோருக்கு, நினைத்தது எல்லாம் நடக்கும் என்கிறார்கள்.      வைத்திய சாஸ்திரப்படி ஒரு மனிதனுக்குரிய ஆயுள் 120 ஆண்டுகள் ஆகும்.  சனி ஒரு ராசியை கடக்க இரடண்டரை ஆண்டுகள் ஆகிறது.  12 ராசியைக் கடக்க முப்பது ஆண்டுகள் ஆகிறது.  எனவே தான் 30 ஆண்டுகள் வாழ்ந்தவரும் இல்லை.  முப்பது ஆண்டுகள் கெட்டவரும் இல்லை என்ற பழமொழி உருவாயிற்று.      ஒவ்வொரு மனிதனின் வாழ்நாளில் முதல் முப்பது ஆண்டுகள் மங்கு சனியின் ஆதிக்கத்திலும், அடுத்த முப்பது ஆண்டுகள் பொங்கு சனியின் ஆதிக்கத்திலும், கடைசி முப்பது ஆண்டுகள் அந்திமச் சனியின் ஆதிக்கத்திலும், கடைசி முப்பது ஆண்டுகள் மரணச் சனியின் ஆதிக்கத்திலும் உள்ள காரணங்களாகும்.  சனியின் ஆதிக்கம் இல்லாத மனிதரே இல்லை என்று சொல்லலாம்.      கொள்ளிக்காடு சனீஸ்வரர் வழிபாடு செய்ய, பக்தர்களின் துன்பங்கள் அனைத்தும் அக்னீஸ்வரரால் சுட்டெரிக்கப்படும் என்பதில் ஐயமில்லை! 

கோயிலுக்குச் செல்லும் வழி :     

இக்கோயில் திருவாரூரில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது.      திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் சஞ்சணம் என்ற ஊரில் இருந்து வடக்கே 8 கி.மீ. தூரத்தில் இந்தத் தலம் அமைந்திருக்கிறது.



-தினமலர் பக்திமலர் ஜனவரி 23, 2014 நாளிதழ்